தமிழகத்தில் அ.தி.மு.க.–தி.மு.க. கட்சிகளால் மதுவிலக்கை கொண்டுவர முடியாது ஜி.கே.வாசன் பேச்சு

ஆண்டிப்பட்டி

தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகளால் மதுவிலக்கை கொண்டு வரமுடியாது என்று ஆண்டிப்பட்டியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசினார்.

ஜி.கே.வாசன் பிரசாரம்
தேனி மாவட்டத்தில் மக்கள்நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று பிரசாரம் செய்தார். ஆண்டிப்பட்டி நகருக்கு வந்த அவர் வாகனத்தில் நின்றபடி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:–

வெளிப்படையான ஆட்சி
தமிழ்நாட்டு மக்களுக்கு இலவசங்களை கொடுத்து அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் இயலாமை நிலைக்கு தள்ளியுள்ளனர். இலவசங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து, கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்துள்ளனர். 50 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே மக்கள் நலக்கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி வெற்றி பெறவில்லையென்றால் தமிழகத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது. தி.மு.க., அ.தி.மு.க.வின் கடந்த 30 ஆண்டுகால ஆட்சியில் நேர்மை, எளிமை, தூய்மை இல்லை. ஆனால் மக்கள் நலக்கூட்டணியில் நல்லவர்கள் ஒன்று கூடியுள்ளோம். எங்களின் ஆட்சி வெளிப்படையாக இருக்கும்.

மதுவிலக்கு
தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் முல்லைப்பெரியாறு பிரச்சினையில் ஆளும் அ.தி.மு.க. மற்றும் ஆண்ட தி.மு.க. கட்சிகள் உரிமையை பெற்றுத்தரவில்லை. மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் கேரள அரசுடன் பேசி தமிழகத்தின் நியாயத்தை நிலைநாட்டுவோம். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்தாத கேரள அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகளால் தமிழகத்தில் ஒருபோதும் மதுவிலக்கை கொண்டு வரமுடியாது. காமராஜர் ஊர், ஊராக பள்ளிக்கூடங்களை திறந்தார். ஆனால் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துள்ளன. இதேபோல காங்கிரஸ், பா.ஜ.க.வினருக்கும் மதுவிலக்கு பற்றி பேச தகுதியில்லை. இந்த இரண்டு கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இன்றளவும் மதுக்கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

ஏறுமுகம்
ஆறுமுகம் கொண்ட இந்த மக்கள்நலக்கூட்டணிக்கு இனிமேல் ஏறுமுகம் தான். அ.தி.மு.க, தி.மு.க. கட்சிகளுக்கு அதிகார பலம், ஆட்சிபலம், பணபலம் இருக்கலாம். ஆனால் நாளைய தமிழகத்தை ஆளப்போகும் எங்களுக்கு மக்கள்பலம் இருக்கிறது. மக்கள் பலமே வெற்றிக்கு அடித்தளம். ஒருமுறை வாய்ப்புத் தாருங்கள் தமிழகத்தை மாற்றிக் காட்டுகிறோம்.

மேற்கண்டவாறு ஜி.கே.வாசன் பேசினார்.201604270134168301_In-Tamil-Nadu--AIADMK--DMK-By-the-partiesThe-assembly_SECVPF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *