த.மா.கா. சார்பில் பெருந்தலைவர் காமராஜின் 115-வது பிறந்தநாளையொட்டி இன்று தேனாம்பேட்டை தலைமை அலுவலகத்தில் காமராஜரின் புகழ் பரப்பும் பிரசார வாகனத்தை அதன் தலைவர் ஜி.கே.வாசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மூத்த தலைவர் ஞானதேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேசன், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சத்தியநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற ஜூலை 15-ந்தேதி காமராஜரின் 115-வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் நகரம், கிராமம், வட்டம் என அனைத்து பகுதிகளிலும் த.மா.கா. சார்பில் விழா எடுத்து கொண்டாடப்படும் மயிலை மாங்கொல்லையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
காமராஜரின் புகழ் பரப்ப செய்யும் வகையில் பிரசார வாகனங்கள் காமராஜரின் சாதனைகளை விளக்கி சென்னை முழுவதும் சுற்றி வரும்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஜவுளி, பட்டாசு, தீப்பெட்டி, உணவு பண்டங்கள் விலை ஏறியுள்ளன. தொழில்கள் நலிவடைந்துள்ளன. வணிகர்கள் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். த.மா.கா. சார்பில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து விரைவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மாவட்ட நீதிபதிகள் நியமனம் தொடர்பான புதிய தேர்வு முறை ஏற்புடையதல்ல. நடைமுறை சிக்கல் உள்ளதால் பழை முறையில் நீதிபதிகள் நியமனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
