ஜல்லிக்கட்டு நடத்த வீரர்களின் உணர்வுகளுக்கு யாரும் தடைபோட முடியாது என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்.
திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
ஜல்லிக்கட்டு தமிழக மக்களின் பண்பாட்டு உரிமம், பாரம்பரியஉரிமை. ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு மட்டுமல்ல, வீர விளையாட்டாகும். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தாற்காலிகமாக சட்டப்பூர்வமாக தடை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், வீரர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த உணர்வுகளுக்கு யாரும் தடை போட முடியாது. பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு பல பெயர்களில் நடைபெற ஆயத்தம் ஆகிக் கொண்டிருக்கிறது.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமெனில். துன்புறுத்தப்படும் விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை அகற்ற வேண்டும். கொள்கை முடிவை அறிவித்து அதற்கான அவசரசட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும். மாநில அரசும் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்து அதற்கான சாத்தியக் கூறுகளை மேற்கொள்ளவேண்டும். தமிழக அரசு ஏறு தழுவுதல் என்ற பெயரில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்.
மாடுபிடி வீரர்கள் உணர்வுப்பூர்வமாக நடத்தி வரும் நிலையில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்களைக் காவல்துறை கண்டிப்பதும், தடியது நடத்துவதும் சரியானதல்ல. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என காவல்துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும்.
விவசாயப் பிரச்னை என்பது வேறு, ஜல்லிக்கட்டு பிரச்னை என்பது வேறு. விவசாயிகள் பிரச்னை முக்கியமானதாகும். விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தாலும் முழுமையான நிவாரணம் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு என்பது பண்பாட்டு, கலாசார உரிமை. எனவே ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது மத்திய, மாநில அரசுகளின் உரிமையாகும். எந்த விதத்திலும் உணர்வுப்பூர்வமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும் அதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் முழுமையான ஆதரவை அளிக்கும்.
பாரதியஜனதா தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஜல்லிக்கட்டு நடத்தியிருந்தால் அக்கட்சி பெயர் பெற்றிருக்கும். தற்போது ஆட்சிப் பொறுப்பில் மத்தியிலும், மாநிலத்திலும் உளள கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், அதை செய்யஇரு அரசுகளும் தவறிவிட்டன.
தமிழகத்தில் விவசாயிகள் பசிப் பட்டினியால்வாடுகிறார்கள். லட்சக்கணக்கில் செலவு செய்தும் வறட்சியால் பயிர்கள் கருகிப் போனதால் அதிர்ச்சியில் விவசாயிகள் இறக்கிறார்கள். மாநில கூட்டுறவு வங்கிகளிலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாயிகள் பெற்ற கடன்களை மத்திய, மாநில அரசுகள் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டப் பிறகும் கூட தமிழகத்துக்குத் தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தரவில்லை. காவிரிப் பிரச்னையில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்படவில்லை. மாநில அரசும் விவசாயிகளின் நலன்களைக் காக்கத் தவறிவிட்டது.
இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்துள்ளனர். 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வறட்சி காரணமாக அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்து கொண்டும் உள்ளனர். இதை கட்சிகள் கூறவில்லை. ஊடகங்கள் தெரிவித்துவருகின்றன. ஆனால், அமைச்சர்கள், அதிகாரிகள்குழு ஆய்வு செய்து விட்டு, 17 விவசாயிகள்தான் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அரசு கூறுகிறது. இது அப்பட்டமான பொய், இது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார் வாசன்.
பேட்டியின் போது, மாவட்டத் தலைவர்கள் நந்தா கே.செந்தில்வேல், குணா, கே.வி.ஜி.ரவீந்திரன், மாநில விவசாயப் பிரிவுத் தலைவர் புலியூர் ஏ.நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
