செம்மரக் கடத்தல் வழக்கு: தமிழர்களை மீட்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களையும் மீட்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
தமிழகத்திலிருந்து ஆந்திரத்துக்கு சென்ற 32 கூலித் தொழிலாளர்களை, ஆந்திர காவல்துறையினர் செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி கைது செய்தனர்.
இந்த நிலையில், செம்மரம் வெட்டினால் ஜாமீன் கிடையாது என்று கூறி, 32 பேருக்கும் திருப்பதி நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து தீர்ப்பளித்துள்ளது. இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
செம்மரம் வெட்டினாலோ, கடத்தினாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.
ஆனால், அப்பாவித் தமிழர்கள் மீது பொய் வழக்கு போட்டு 33 நாள்களுக்கும் மேலாக சிறையில் அடைத்திருப்பது சட்டத்துக்குப் புறம்பானது.
ஏற்கனவே இது போன்ற பொய் வழக்கில் கைது செய்யப்பட்டத் தமிழர்களை குற்றமற்றவர்கள் என்று கூறி ஆந்திர நீதிமன்றம் விடுவித்தது.
எனவே, எந்தக் குற்றமும் செய்யாத தமிழர்களை விடுதலை செய்ய ஆந்திர அரசு முன்வர வேண்டும்.
இது தொடர்பாக தமிழக அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து, அப்பாவித் தமிழர்களை மீட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *