மதுரையில் த.மா.கா. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தலைவர் ஜி.கே.வாசன் விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழகம் முழுவதும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறோம். இதுவரை 14 மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் த.மா.கா. வலுவாக செயல்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் ஒத்தக்கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம்.
சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலர் பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய-மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு உடனடி தீர்வு காணவேண்டும். மத்திய அரசு இலங்கைக்கு 100 டன் அரிசி மற்றும் குடிநீரை வழங்கி உள்ளதை வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் இந்தியாவில் குறிப்பாக தமிழகம் வறட்சியில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பிரச்சனையையும், குடிநீர் பிரச்சனையையும் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் குழப்பமான சூழ்நிலையில் செயற்கையான அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் பிரச்சனைகளை அரசால் தீர்க்க முடியவில்லை. எனவே சட்டசபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட தலைவர் சேதுராமன், முன்னாள் எம்.பி.க்கள் சித்தன், ராம்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
