தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. G.K. வாசன் அவர்கள் விடுக்கும்
குடியரசு தின வாழ்த்துச் செய்தி
இந்தியா உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு (Largest Democracy). இந்தப் பெருமையை, சிறப்பை நமக்குப் பெற்றுத் தந்தது இந்திய அரசியில் அமைப்புச் சட்டமும், அது உருவாக்கித் தந்த பாராளுமன்ற ஜனநாயக முறையும் தான்.
உலகிலேயே மிகவும் உன்னதமான, மிகவும் நீண்ட, மிகத் தெளிவான இந்திய அரசியல் அமைப்புச் சட்டதை நம் தேசத்தின் முதிர்ந்த அரசியல் தலைவர்களும், சட்ட மேதைகளும், பல்துறை வல்லுநர்களும் உருவாக்கித் தந்தார்கள். அவர்களில் முன்னின்று முழு வடிவம் கொடுத்தவர்கள் பாபு ராஜேந்திர பிரசாத், அண்ணல் அம்பேத்கர், பண்டித ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், அபுல்கலாம் ஆசாத், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், ஐ.சி.எஸ். அதிகாரி பி.என்.ராவ், கல்வியாளர் ஜெரோம் டிசௌசா போன்ற மேதைகளும், அவர்களுக்குத் துணை நின்ற 200 அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களும் தான். இந்த அற்புதமான அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாள் தான்: ஜனவரி 26, 1950 – அன்று முதல் இந்திய தேசம் சுதந்திர “ஜனநாயகக் குடியரசாக“ (Sovereign Democracy Republic) இயங்கி வருகிறது.
இன்று நாம் நம் தேசத்தின் 67 ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறோம். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த இனிய நாளில், அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த நேருஜி, பட்டேல், அம்பேத்கர் உள்ளிட்ட அனைத்து மேதைகளுக்கும் நாம் நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம். “26.01.1950 – லிருந்து இந்திய மக்களுக்கு அரசியல் சமத்துவத்தை (Political Equality) வழங்கி விட்டோம். அது மகிழ்ச்சிக்கு உரியதே. ஆனால் பொருளாதார சமத்துவம் (Economic Equality), சமூக சமத்துவம் (Social Equality) ஆகிய இரண்டு இலட்சியங்களை நாம் எட்ட வேண்டும், இல்லை என்றால் அரசியல் சமத்துவம் என்பது பொருளற்றதாகிவிடும்” – என்று அறிவுறுத்தினார்கள் அம்பேத்கரும், நேருஜியும். ஆனால் நாடு குடியரசு ஆகி, அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 66 ஆண்டுகள் ஆனபின்பும், சமூக ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இன்னும் நீக்கப்படாமல் இருப்பது நமக்கு மிகுந்த கவலை அளிக்கிறது.
“67 ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிற நாம் சாதி, மத, இன, பிராந்திய வேறுபாடுகளைத் துறப்போம்; பொருளாதார மற்றும் சமுதாய ஏற்றத் தாழ்வுகளை குறைப்போம்; அவைகளை முழுமையாக நீக்குவோம்; தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்போம்; பாராளுமன்ற ஜனநாயக நெறிகளைப் பேணிக் காப்போம்” – என நாம் உறுதி ஏற்றுச் செயல்படுவோம். இதனையே குடியரசு தின வாழ்த்தாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
G.K. வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
