உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து விரைவில் முடிவு : ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை:  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும்  உள்ளாட்சி தேர்தல் குறித்த 3 நாள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடந்தது. அப்போது, ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாகை மாவட்டம் சாம்ரத்தனில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்பது அந்தப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. தமிழக அரசும் அப்பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று 2015ல் அறிவித்தது. எனவே அதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வாரியாக 3 நாட்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு நாளும் 24 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள், வேட்பாளர்கள், கூட்டணி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.

கட்சியை வளர்க்கும் நோக்கில் தெரிந்த முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். சந்தர்ப்பவாதிகள் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு போவது எல்லா அரசியல் கட்சிகளிலும் நடக்கிறது. சந்தர்ப்பவாதிகள் போய்விட்டாலும் உண்மையான தொண்டர்கள் எப்போதும் என்னுடனே இருக்கின்றனர்.

பாலாறு, காவிரி, முல்லைப்ெபரியாறு பிரச்னைகளையும், தமிழக மீனவர் பிரச்னையிலும் மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கட்சியின் இளைஞரணி சார்பில் ஆக.3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.  இவ்வாறு வாசன் தெரிவித்தார்.ஞானதேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர், கத்திப்பாரா ஜனார்த்தனன், ஜி.ஆர்.வெங்கடேஷ், ஆர்.சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *