அரசு மருத்துவமனைகளின் ஊழியர்கள் பற்றாக்குறையைப் போக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் உள்ள ஊழியர் பற்றாக்குறையைப் போக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 140 சுகாதார மையங்களில் பெரும்பாலானவற்றில் மருத்துவர் மற்றும் மருத்துவ வசதிகள் பற்றாக்குறையாக உள்ளன. இதனால் மருத்துவமனைகளுக்கு அன்றாடம் வரும் சாதாரண பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்க உள்ளதால், நோய்த் தடுப்பு, சிகிச்சை ஆகியவற்றுக்கு 24 மணி நேர மருத்துவ வசதிகள் அவசியம் இருப்பது இன்றியமையாதது.

காலரா போன்ற தொற்று நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவமனைகளிலும் இரவு, பகல் சிகிச்சை அளிக்க வேண்டியது கட்டாயம். எனவே,தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு சுகாதார மையங்களையும் சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து, அங்குள்ள பற்றாக்குறைகளை கண்டறிந்து, பூர்த்தி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களிலும் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையை முழுமையாகப் பூர்த்தி செய்து, பொது மக்களுக்கு தடங்கலின்றி சேவை அளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *