அக்., 1ல் கர்நாடகாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்: வாசன் பேட்டி

மதுரை : ”தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா மற்றும் மத்திய அரசுகளை கண்டித்து, அக்., 1ல் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,” என, மதுரையில் த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளை கேட்டு வருகிறேன். மதுரை மாவட்டத்தில் 15 கிராம மக்களை சந்தித்தேன். டெல்டா விவசாயிகளின் தொடர் வாழ்வாதாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து விட்டது. கர்நாடகா மற்றும் மத்திய அரசுகளைக் கண்டித்து அக்., 1ல் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் பங்கேற்பர்.

உரங்களுக்கு மானியம்: மதுரை உட்பட ஆறு மாவட்டங்களில் வறட்சி நிலவுவதால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்தேக்க இருப்பை 152 அடியாக உயர்த்த மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கொய்யா, மா, தென்னை விவசாயிகளுக்கு தமிழக அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். சொட்டு நீர் பாசன விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் உரங்களை உரிய நேரத்தில் மானியத்தில் வழங்க வேண்டும்.

ஜல்லிக்கட்டிற்கு அங்கீகாரம்: வீர விளையாட்டான அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தது கவலையளிக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு சட்ட ரீதியாக அங்கீகாரம் அளிக்க வேண்டும், என்றார்.