தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாளான ஆகஸ்டு மாதம் 19–ந்தேதி விவசாயிகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விவசாயிகள் மாநாடு ஈரோடு திண்டலில் நேற்று மாலை நடந்தது.
விழாவுக்கு மாநில துணை தலைவர் ஆ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். விழாவில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
பின்னர் மாநாட்டில் ஜி.கே.வாசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் உள்ள 5 கோடி விவசாயிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் இயக்கமாக தமிழ் மாநில காங்கிரஸ் இருக்கும். விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்று உறுதியை தமிழ் மாநில காங்கிரஸ் லட்சியமாக கொண்டு உள்ளது. அவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். துணையாக நின்று அவர்களுக்காக போராடுவோம்.
தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதில் த.மா.கா.வினர் உறுதியாக இருக்க வேண்டும். இதற்காக கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து தீவிரமாக நடத்த வேண்டும். அக்டோபர் 2–ந்தேதிக்குள் ஒரு கோடி கையெழுத்து என்ற இலக்கை அடைந்து தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் .
முன்னதாக ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அரசியல் கட்சி தலைவர்களின் செயல்பாடுகள், பேச்சுகளை பொதுமக்கள் கூர்ந்து கவனிக்கின்றனர்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்னை பற்றி அவதூறாக பேசியதாக தகவல் கூறுகின்றனர். அவர் பாரம்பரிய அரசியலுக்கு சொந்தக்காரர். அனுபவம் மிக்கவர். என்னை காட்டிலும் 17 வயது மூத்தவர். அவரை வாழ்த்த வயதில்லை என்றாலும் 100 ஆண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.
கூட்டத்தில் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாளான ஆகஸ்ட் மாதம் 19–ந்தேதியை விவசாயிகள் தினமாக கொண்டாடுவது. காவிரி பாசன பகுதியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
அத்திகடவு–அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மஞ்சளை அரசு கொள்முதல் செய்யும் வகையில் ஈரோட்டில் மஞ்சள் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
