கோவையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் ரத ஊர்வலம் தொடக்க விழா இன்று நடைபெற்றது.இதில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று கோவை வந்தார்.
அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அவர் கூறியதாவது:–
தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை 40 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எங்களது லட்சியமான 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் நகரம் முதல் கிராமம் வரை மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகிறோம்.
இதன் தொடக்க விழா கோவையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
மத்திய அரசின் பட்ஜெட் ஆவணங்கள் திருட்டு குறித்து அரசு பொதுமக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.மக்கள் அரசின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருகிறார்கள். உண்மை வெளி வரவேண்டும். அதுவும் விரைவில் வெளிவர வேண்டும்.மேற்கண்டவாறு அவர் கூறினார்.அதை தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை ரத ஊர்வலம் மற்றும் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணியை ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார்.
பேரணியில் கலந்து கொண்ட 1000–க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஜி.கே.வாசன் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் கட்சிக்கொடி கட்டி ஊர்வலமாக சென்றனர்.
