தமாகா தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரால் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இது தவிர பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு காவிரி நீர் தான் குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேலும் காவிரி நீரானது புனித நீராக ஆன்மீக வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே மேட்டூர் – காவிரி நீர் தேக்கப்பகுதிகளான கீரைக்காரனூர், கூணாண்டியூர், மாசிலம்பாளையம், பண்ணவாடி, கோட்டையூர், பானாறு, ஓட்டனூர், காரமறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி நீரில் கழிவுகள் தேங்கி வருகின்றன. இதனால் அப்பகுதியில் நீர் மாசுபட்டு, காற்று மாசுபட்டு சுற்றுப்புற சுகாதாரத்திற்கும், சுவாசத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கர்நாடகாவில் உள்ள ‘ஆர்புலா’ அணையில் இருந்து கழிவு நீர் திறக்கப்பட்டு தமிழகத்திற்கு வரும் காவிரி நீரில் கலக்கிறது. இந்த கழிவு நீர் செல்லும் வழியில் இந்நீரைப் பயன்படுத்தும் மனித உயிர் மற்றும் பறவைகள், கால்நடைகள் என பல்வேறு உயிரினங்களின் உடல்நலன் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு. மேலும் காய்ச்சல், கண் எரிச்சல், நுரையீரல் தொற்றுநோய் என பல நோய்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். எனவே தமிழக அரசு உடனடியாக கர்நாடக அரசோடு தொடர்பு கொண்டு கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வருகின்ற காவிரி நீரில் அம்மாநிலத்தில் இருக்கின்ற ‘ஆர்புலா’ அணையின் கழிவு நீர் கலக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
