தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 5ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி டிசம்பர் 1ம் தேதி அரியலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ் மாநில காங்கிரசின் லட்சியப் பயணத்தில் 4 ஆண்டு முடிந்து 5ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிற சிறப்பான நிகழ்வு வரும் டிசம்பர் 1ம் தேதி சனிக்கிழமை அரியலூரில் மாபெரும் பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது. தமாகா ஒரு குடும்ப பாசமுள்ள, நல்ல இயக்கமாக வளர்ந்து வருகிறது. ஆகவே தான் தங்களை தங்களது குடும்பத்தாருடனும், உற்றார் உறவினர்களுடனும் நமது இயக்க நண்பர்களுடனும், நமது தொண்டர்களுடனும் படை சூழ அரியலூர் மாநகரத்திற்கு டிசம்பர் 1ம் தேதி மாலை 4 மணிக்கு அணி அணியாக, அலை கடலாய் ஆர்ப்பரித்து காமராஜர், ஜி.கே.மூப்பனார் ஆகியோரது புகழ் பாடி, கொடி ஏந்தி,
வீறு நடைபோட்டு வந்து விழாவை சிறப்பாக்கிட வேண்டுகிறேன். வரும் காலத்தில் கட்சியை மேலும் உயர்த்திடவும், வீழ்ந்து கிடக்கிற தமிழகத்தை காப்பாற்ற வேண்டியதும் நம் தலையாய கடமை ஆகும். ஆகவே உங்கள் ஒவ்வொருவரையும் 5ம் ஆண்டு துவக்க பெருவிழா பொதுக்கூட்டத்தில் நேரில் பார்க்க வேண்டும் என்று காத்திருக்கிறேன். நம் இயக்க நண்பர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மகளிர், தொழிலாளர் தோழர்கள், மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள் என்று அனைத்து தரப்பினரும் இதை நேரடி அழைப்பாக ஏற்று வாருங்கள், கூடுங்கள். நாளையின் வெற்றி நமதே என்ற நம்பிக்கையோடு வாருங்கள். சந்திப்போம், சங்கமிப்போம், புதிய வரலாறு படைப்போம். இவ்வாறு ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
