பட்டாசு ஆலை மற்றும் குடோன்களில் 100 சதவீத பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. பட்டாசுத் தொழிலை நம்பியே லட்சக்கணக்கான தொழிலாளர்களும், அவர்களின் குடும்பங்களும் வாழ்கின்றன. அப்படி இருக்கும் போது பட்டாசுத் தொழிலை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு இருக்கிறது.
ஆனால் தமிழக அரசு பட்டாசுத் தொழிலை பாதுகாத்திடவும், தொழிலாளர்கள் நலன் காப்பதற்கும் தொடர் நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்றால் அது கேள்விக்குறியே. காரணம் தொடர்ந்து அவ்வப்போது பட்டாசு ஆலைகளில் தீ விபத்து, வெடி விபத்து ஏற்படுகிறது. இதற்கு காரணம் பட்டாசு உற்பத்தி செய்யும் இடம், உற்பத்தி செய்த பட்டாசுகளை வைத்திருக்கும் இடம் ஆகியவை பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்காமல் இருப்பது தான். தமிழக அரசு தற்போது சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்த பட்சம் தலா 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக கொடுக்க வேண்டும்.
