அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்க்காமல் இருப்பது வேதனைக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.
ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை முன்னுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருவது நியாயமானது என தெரிவித்துள்ள அவர், அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், அவர்கள் மீது அடக்குமுறை கையாளுவது ஏற்புடையதல்ல என கூறியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபடும் தற்காலிக பணியாளர்கள் வேலை இழக்க நேரிடும் என அரசு அறிவித்திருப்பது நியாயமற்றது என சுட்டிக்காட்டியுள்ள வாசன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
