தாமிரபரணியில் இருந்து பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டதில் மக்களின் மனநிலையை அறிந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் செயல்படவில்லை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாமிரபரணி நீரை பெப்சி-கோக் நிறுவங்களுக்கு வழங்கப்படுவதை நிறுத்தக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தாமிரபரணியின் உபரி நீர் தான் கோக்-பெப்சி குளிர்பான ஆலைகளுக்கு வழங்கப்படுவதாகவும், அப்படி வழங்கப்படுவதால் விவசாயத்திற்கோ,மக்களின் பயன்பாட்டிற்கோ நீர் தட்டுபாடு ஏற்படுவதில்லை என்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து விவசாயிகளும் , சமூக ஆர்வலர்களும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பெப்ஸி-கோக் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கடும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தாமிரபரணியில் இருந்து பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டதில் மக்களின் மனநிலையை அறிந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் செயல்படவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறிய அவர், டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் தமிழக விவசாயிகளின் அவல நிலையை உணர்த்துவதாக உள்ளது என்றும் கூறினார். மேலும், நெல்லை ராதாபுரம் பகுதியில் மினரல் ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் தவித்து வருவதாக குறிப்பிட்ட ஜி.கே. வாசன், மூடப்பட்ட மினரல் ஆலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
