தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு முழுவதும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநில பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம் போன்ற பல்வேறு பாடத்திட்டங்களில் மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால் நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டிருக்கும். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். மத்திய பாடத்திட்டத்தின் கீழ் மட்டும் உள்ள வினாத்தாளுக்கு விடை அளிப்பது மிகவும் கடினமானது. தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகிறது. இந்தக் கல்லூரிகளில் சேர்வதற்கு மத்திய அரசு 15 சதவீதம் இட ஒதுக்கீடு செய்கிறது. இந்த தேர்வில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் தமிழக மாணவர்களுக்கு உள்ள இட ஒதுக்கீடு வெளி மாநில மாணவர்களுக்கு கிடைக்கும்.
இதனால் தமிழக மாணவர்கள் குறிப்பாக ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு தடை ஏற்படும். அவர்களின் வாய்ப்பு பறிபோகாமல் இருப்பதற்கு நீட் தேர்வு முறையை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது. இந்த தேர்வு முறைக்கு ஏற்கனவே பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே தமிழக அரசு இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே – நீட் தேர்வு முறையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதற்காக, ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி, அதனை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
– See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=102986#sthash.zX8JfGej.dpuf
