புதுடெல்லி
புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட மத்தியக்குழு இன்னும் தமிழகத்திற்கு வரவில்லை என்று, ஜனாதிபதியை சந்தித்து ஜி.கே.வாசன் முறையிட்டார்.
ஜனாதிபதியிடம் மனு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளான காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண வேண்டும். வரும் ஆண்டு முதல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, பாதுகாப்பு அம்சங்களுடன் தொடர்ந்து நடைபெற வேண்டும். மீன்பிடி தொழில் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படக்கூடாது. விவசாயம் நலிவடைந்ததால் வறட்சி பாதித்த மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் வார்தா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். தற்போதைய பணத்தட்டுப்பாட்டில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி இருப்பது ஏற்புடையது அல்ல. எனவே, விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:–
மத்தியக்குழு வரவில்லை
தமிழ்நாட்டில் பல கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இருந்தபோதிலும் பாராளுமன்றத்தில் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அமளி காரணமாக பாராளுமன்றமே நடக்கவில்லை. இதற்கு மத்திய, மாநில அரசுகளும், கட்சிகளுமே காரணம் என்று பொதுமக்கள் வருத்தப்படுகிறார்கள்.
புயல் பாதிப்பு குறித்து ஆராய மத்தியக்குழு வரவில்லை என்று ஜனாதிபதியிடம் கூறினேன். உடனே அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.
மக்கள் நம்பிக்கை
அ.தி.மு.க.வில் ஜனநாயக முறைப்படி அவர்களது தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன். தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் கேட்டறிந்தேன். பணத்தட்டுப்பாட்டை தீர்க்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. உள்ளாட்சி தேர்தலில் மக்களின் நம்பிக்கையை த.மா.கா. பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
