மத்திய அரசால் விசைத்தறி வாரியம் செயல்படுவது போல தமிழக அரசும் விசைத்தறி வளர்ச்சிக்காக விசைத்தறி வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கருத்துகளை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் முன்வைத்துள்ளார்.
வாசன் முன்வைக்கும் 15 கருத்துகள்
* தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள விசைத்தறி கூடங்களைப் பற்றிய கணக்கெடுப்பை எடுத்து வருகிறது. இக்கணக்கெடுப்பு சரியாக, துல்லியமாக நடைபெற வேண்டும் என்பதுதான் விசைத்தறி தொழில் புரிவோரின் எதிர்பார்ப்பு.
* மத்திய, மாநில அரசுகள் இக்கணக்கெடுப்பை நடத்துவதன் நோக்கம் விசைத்தறி தொழில் மேம்பட வேண்டும் என்பதே.
* விசைத்தறி கணக்கெடுப்பு மேற்கொள்ளும் களப்பணியாளர்களின் பணி மிகவும் இன்றியமையாதது. அதாவது தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை இந்த கணக்கெடுப்பை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
* கணக்கெடுப்பில் ஈடுபடுவோர்கள் விசைத்தறி கூடத்துக்கு சென்று நேரடியாக விசைத்தறி கணக்கெடுப்பில் ஈடுபடும் போது உரிய ஆவணங்களை முறையாக, சரியாக சரிபார்க்க வேண்டும்.
* விசைத்தறி கூடத்திற்கான தனியான மின் இணைப்பு குறித்தும் சரிபார்க்க வேண்டும்.
* விசைத்தறி சங்கங்களுக்கு உட்பட்ட எந்த ஒரு விசைத்தறியும் விடுபடாமல் இருக்க வேண்டும் என்பதை அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும்.
* கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் மூலம் விசைத்தறிக்காக அரசு வழங்கும் சலுகைகள், கடன் உதவிகள் போன்றவை அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் கிடைத்திட வேண்டும்.
* விசைத்தறி தொழில் மேம்பட்டு, விசைத்தறி தொழிலாளர்களும், இத்தொழிலை நம்பியிருப்போர்களும் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்.
* மத்திய அரசால் விசைத்தறி வாரியம் செயல்படுவது போல தமிழக அரசும் விசைத்தறி வளர்ச்சிக்காக விசைத்தறி வாரியம் அமைக்க வேண்டும்.
* கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் துணிகளை குறிப்பாக துண்டு, போர்வை, வேட்டி, சேலை போன்றவற்றை அரசு கோ ஆப்டெக்ஸ் மூலம் முழுமையாக கொள்முதல் செய்து விற்பனை செய்திட வேண்டும். இதன் மூலம் கைத்தறி தொழில் மேம்பட்டு, தொழிலாளர்கள் நலன் காக்கப்படும்.
* தற்போது பொங்கல் பண்டிகை வர இருப்பதால் கோ ஆப்டெக்ஸ் மூலம் கைத்தறி துணிகளை அதிக அளவில் விற்பனை செய்து தொழிலாளர்கள் நலன் காப்பதற்கும், அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்கும் உடனடியாக உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
* நெசவாளர்களின் கூட்டுறவுக் கடன் முழுவதையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
* கைத்தறி, விசைத்தறி மூலம் தயாரிக்கப்படும் துணிகளை பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து இத்தொழிலை வளர்ச்சி பெறச் செய்வதோடு, வருமானத்தை பெருக்க வேண்டும்.
* மத்திய, மாநில அரசுகள் ஜவுளித் தொழிலை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்து, செயல்படுத்த வேண்டும்.
* குறிப்பாக கைத்தறி, விசைத்தறி தொழிலை காப்பாற்றி, இத்தொழில்புரிவோரையும், இத்தொழிலை நம்பியிருப்போரையும் முன்னேற்றம் காண வழி வகுத்து தர மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.
