தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, சங்க தலைவர் கத்திப்பாரா ஜெனார்த்தனன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜசேகர், எஸ்.பி.ஆர்.வெங்கடேசன், எம்.எஸ்.மணி, எம்.என்.ெஜ.சுகுமாறன், சக்கரவர்த்தி, குணசேகரன், எக்ஸ்பிரஸ் எல்லப்பன், கார்த்திகேயன், மணலி பாண்டியன், அசோகன், நந்தம்பாக்கம் ஜெ.குமரன், மோகன கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு, சங்கத்தை சேர்ந்த இயந்திர டிவைர்களின் குடும்பத்தினருக்கு லேப்-டாப், தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
இந்த தொழிலில் உள்ளவர்களுக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம். மண் அள்ளும் இயந்திர தொழிலை முறையாக செய்து வருகின்றனர். ஆனால் அரசு அவர்களுக்கு சலுகைகள் பலவற்றை பறிக்கிறது. செங்கல்பட்டில் மண் அள்ள உள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என நம்புகிறேன். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் மெத்தன போக்கை காட்டுகிறது. எனவே, சட்ட திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். பழைய நோட்டுகளை மாற்ற முடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். வங்கிகளும், ஏடிஎம்களும் முறையாக செயல்படவில்லை. ஒரு நாள் முழுவதும் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இந்த பிரச்னையை முறைப்படுத்தவில்லை என்றால் மத்திய பாஜ அரசை கண்டித்து தமாகா தமிழகத்தில் போராட்டத்தில் குதிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருமாவளவன் வாழ்த்துரை வழங்கி பேசுகையில், ‘‘இந்த விழாவில் பங்கேற்க வரும் போது வழி எங்கும் வங்கிகள், ஏடிஎம்கள் முன்னால் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து கிடந்து பழைய நோட்டுகளை மாற்ற பரிதவித்துக் கொண்டிருப்பதை பார்த்தேன். இது சாதாரண அடித்தட்டு மக்களின் ஜீவாதாரத்தை நசுக்கும் வகையில் உள்ளது. இந்த அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டிய நிலை வரும்’’ என்றார்.
