லாபத்தில் இயங்கும் சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கக் கூடாது: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

லாபத்தில் இயங்கும் சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் சேலம் உருக்காலை மிகவும் முக்கிமான ஒன்று. நம் நாட்டின் பாதுகாப்புக்கு பயன்படும் பீரங்கி குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள், சாதாரண மக்கள் பயன்படுத்தும் சில்லரை காசுகள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடுகள், கத்தி, கத்தரி, ஊசி மற்றும் பிளேட்டுகள் போன்ற பல்வேறு மருத்துவ கருவிகள் இந்த சேலம் உருக்காலையில் உற்பத்தி செய்யப்படும் உலகத்தரம் வாய்ந்த ஸ்டீலால் ஆனது.ஒட்டு மொத்த பொதுத்துறை நிறுவனங்களின் லாப நட்டத்தை கணக்கிட்டு, அதற்காக லாபத்தில் இயங்கும் சேலம் உருக்காலை உட்பட 22 பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏதோ ஒரு காரணத்திற்காக பொதுத்துறை  நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது தொழிலாளர்களின் இத்தனை ஆண்டுகால உழைப்பிற்கு பயன் ஏதும் கிடைக்காமல் போகின்ற நிலையே ஏற்படும்.சேலம் உருக்காலையை தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாக செயல்படுத்திடவும், தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது என்பதற்காகவும் பல்வேறு தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் இதனை வலியுறுத்தி வருவதையும் மத்திய அரசு கவனத்தில் கொண்டு சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *