உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகே கூட்டணி குறித்து அப்போதைய நிலைமைக்கேற்ப முடிவு செய்யப்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
அரக்கோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேலூர் கிழக்கு மாவட்ட தமாகா நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக அரசு தேர்தல் நேரத்தின் போது தொழிலாளர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் இன்று தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைமைச் செயலராக இருந்தவர் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்க வேண்டும். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு ஆளும்கட்சி பதிலளிக்க வேண்டும். அதிமுக அரசின் நூறுநாள் ஆட்சியில் கொலை, கொள்ளை, திருட்டு பாலியல் தொந்தரவுகள் அதிகரித்துள்ளன.
கர்நாடகாவுக்கு காவிரி, கேரளத்துக்கு முல்லைப் பெரியாறு, சிறுவாணி, ஆந்திரத்துக்கு பாலாறு என பல்வேறு பிரச்னைகளால் தமிழக விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கூட்டி உறுதியான நிலைப்பாட்டை எடுத்து பிரதமரை சந்தித்து முறையிட வேண்டும். மத்திய அரசு ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் கிரிமிலேயர் உச்சவரம்பை 15 லட்சமாக உயர்த்த வேண்டும். குறுக்குவழியிலும் பின்புறக் கதவு வழியாக மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளை பிடிப்பதற்காக அதிமுக அரசு புதிய சட்ட மசோதாக்களை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம் ஜனநாயகத்தை அழித்து பணநாயகம் மூலம் பதவிகளைப் பிடிக்க திட்டமிட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானபிறகு தேர்தல் கூட்டணி குறித்து உரிய முடிவு எடுக்கப்படும்.
அரக்கோணம் நகரில் புதை சாக்கடை திட்டத்திற்காக ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால் பலர் விபத்துகளில் சிக்கி அவதிப்படுவதாக தெரியவந்துள்ளது. இதை தவிர்க்க இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் அரக்கோணத்தில் பஜார் பகுதியில் அரசால் அறிவிக்கப்பட்ட மேம்பாலப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றார்.
வேலூர் கிழக்கு மாவட்ட தமாகா நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்துக்கு ஆர்.அரிதாஸ் தலைமை வகித்தார். இதில் மாநில துணைத் தலைவர் கோவை தங்கம், முன்னாள் எம்.பி. ஏ.எம்.வேலு, மாநில பொதுச் செயலர் விடியல் சேகர், முன்னாள் எம்எல்ஏ இஎஸ்எஸ் ராமன், அரக்கோணம் நகரத் தலைவர் கே.வி.ரவிசந்திரன், ஒன்றியத் தலைவர் மோகன் காந்தி, நகர்மன்ற உறுப்பினர் பார்த்தசாரதி, முன்னாள் உறுப்பினர் உத்தமன், சுபாஷ்வாசன், உமாபதி, ஆறுமுகம், பாலகிருஷ்ணன், சசிகுமார், மாநில இளைஞரணிச் செயலர் தரணி, மாவட்ட மகளிர் தமாகா தலைவர் சாந்த செல்வகுமாரி, வேலூர் மாநகரத் தலைவர் மூர்த்தி, முள்வாய் ஊராட்சி மன்றத் தலைவர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
