பெண்களை துன்புறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் பேட்டி

அரக்கோணம்:

அரக்கோணத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக த.மா.கா. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். அப்போது அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டியின் போது அவர் கூறியதாவது:- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கத்தினர் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தேர்தலின் போது தொழிலாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

அதன் தாக்கம் தான் தொழிலாளர்களின் தற்போதைய வேலை நிறுத்த போராட்டம். தொழிலாளர்களின் பிரச்சனைகளை மத்திய அரசு செவி சாய்த்து கேட்க வேண்டும்.

பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தலைமை செயலர் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சஸ்பெண்டு செய்யப்படும் விவகாரத்தில் எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு ஆளுங்கட்சி பதில் அளிக்க வேண்டும்.

சஸ்பெண்டு தொடர்பாக சரியான விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. சென்னையில் மென் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து விழுப்புரம், கரூர், தூத்துக்குடி என பெண்கள் மீதான தாக்குதல், கொலைகள் அதிகரித்து வருகிறது.

பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இதனால் அவர்களுக்கு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை துன்புறுத்துவோர் மீது உச்சகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தண்டனைகள் கடுமையாக வழங்க வேண்டும். பெண்கள் சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் கிரிமிலேயர் பிரிவில் முழு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

கேரளா அரசு சிறுவாணியில் அணை கட்டுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் கேரள அமைச்சரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது கேரள அமைச்சரால் பதில் கூற முடியவில்லை. பாலாறு, சிறுவாணி, முல்லை பெரியாறு, காவிரி பிரச்சனை நீண்டுக்கொண்டே போகிறது. தமிழக அரசு கடிதம் எழுவதை நிறுத்திவிட்டு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

பின்னர் பிரதமரை சந்தித்து முறையிட வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க. அரசின் 100 நாள் ஆட்சியில் முன்பில்லாத அளவுக்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *