கர்நாடக அணையை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைக்க வேண்டும்

கர்நாடக அணையை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைக்க வேண்டும்
கர்நாடக அணைகளின் நீர் இருப்பை ஆய்வு செய்ய மத்திய அரசு உடனடியாக குழு அமைக்க வேண்டுமென்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.
திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜி.கே.மூப்பனாரின் 85-ஆவது பிறந்த நாள் மற்றும் விவசாயிகள் தினவிழா பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதித்துள்ளது. நிகழாண்டு சம்பா சாகுபடி நடைபெறுமா என்பது சந்தேகம் என்பதால் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சம்பாவுக்கு
தண்ணீர் பெற்றுக்கொடுக்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்துக்கு விகிதாசாரப்படி கொடுக்க வேண்டிய தண்ணீரை மத்திய அரசு உடனடியாக பெற்றுக் கொடுப்பதுடன், டெல்டாவை பாதுகாக்கப்பட்ட
வேளாண் மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் செல்ல பாசன ஆறுகளைத் தூர்வார வேண்டும்.
கர்நாடக அரசு புதிய அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று கூறும் கர்நாடகத்தின் பிடிவாதப் போக்கு உச்ச நீதிமன்றத்துக்கு எதிரானது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா காவிரி நீர் பெறுவது குறித்து வெறும் கடிதம் எழுதினால் மட்டுமே போதாது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி பாலாறு, முல்லைப் பெரியாறு, காவிரி நீர் உள்ளிட்ட
பிரச்னைகளுக்கு பிரதமரை சந்தித்து தீர்வு காண வேண்டும் என்றார் வாசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *