ஆந்திர அரசை கண்டித்து சட்டசபையில் தீர்மானம்: த.மா.க., தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

திருவண்ணாமலை: ”பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு தடுப்பணை கட்டுவதை கண்டித்து, தமிழக சட்டசபையில் அனைத்து கட்சி ஆதரவோடு, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,” என, த.மா.கா., தலைவர் ஜி.கே., வாசன் கூறினார்.
இதுகுறித்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஆந்திரா அரசு, தமிழக எல்லையில் தடுப்பணை கட்டியதை கண்டித்து, சட்டசபையில் அனைத்து கட்சி ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும். பாலாற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மணல் ஆழமாக அள்ளப்படுகிறது. இதை தடுக்க வேண்டும், தோல் கழிவு நீர் கலந்து பாலாற்று நீர் மாசுபட்டு, அதை குடித்த வாத்துகள் இறந்துள்ளன. இந்த நீரை குடித்தால் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இதை தடுத்து நிறுத்த வேண்டும். முழுமையான மது விலக்கை கொண்டு வந்தால் மட்டுமே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும். கரும்பு விவசாயிகளுக்கு பாக்கி தொகையை விரைந்து வழங்க வேண்டும். ஹரித்துவாரில், ஒரு வாரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது திருப்தியளிக்கிறது. தமிழக அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது. ஆனால், பட்ஜெட்டில், 15 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை என கூறியுள்ளது. நிதி பற்றாக்குறை உள்ளபோது, எப்படி திட்டங்களை விரைந்து முடிக்க முடியும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், கூட்டணி குறித்தும் நிர்வாகிகளின் விருப்பத்திற்கேற்ப நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *