கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களால் பாதிப்பு இல்லை

விலகிச் சென்றவர்களால் கட்சிக்கு நஷ்டம் இல்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.

தமிழ் மாநில காங்கிரஸ், திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் காமராஜரின் 114-ஆவது பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டம் திருப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:

கல்வி, தொழில், விவசாயம், சுகாதாரம் ஆகிய துறைகளில் தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர் காமராஜர்.

இன்றையச் சூழலில் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கல்வியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இதற்கு, காமராஜர் அவரது ஆட்சியில் கொண்டு வந்த சத்துணவு உள்ளிட்ட மிக முக்கியமான திட்டங்களே காரணம்.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் ஆளுங்கட்சியை விட சிறப்பாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். எங்கள் கட்சியிலிருந்து பதவிக்காகவும், சுய லாபத்துக்காகவும் சிலர் விலகிச் சென்றனர். அவர்களால் கட்சிக்கு நஷ்டம் இல்லை.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்களுக்கு நம்பிக்கைக்குரிய ஆட்சியை இப்போதுள்ள ஆட்சியாளர்கள் வழங்கவேண்டும். திருப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் தில்லியில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், அவரது இறப்பு குறித்த உண்மை மக்களுக்குத் தெரியவரவேண்டும்.

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வரவுள்ளது. அது நடுநிலையானதாக இருக்க வேண்டும். கல்விக் கொள்கை குறித்து கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களிடம் கருத்துக் கேட்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு பயனுள்ள கல்விக் கொள்கையாக அது இருக்க வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, தில்லியில் மர்மமான முறையில் உயிரிழந்த மருத்துவப் பயிற்சி மாணவர் சரவணனின் பெற்றோரை ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *