தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.துரைசாமி கவுண்டர் நேற்று மரணம் அடைந்தார். அவருடைய உடலுக்கு ஜி.கே.வாசன் அஞ்சலி செலுத்தினார்.
மூத்த தலைவர்
ஈரோடு திண்டல் செங்கோடம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் எஸ்.துரைசாமி கவுண்டர். திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியை தொடங்கி அதன் முதல் தாளாளராக செயல்பட்டவர். இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளில் மூத்த தலைவராக விளங்கியவர். இவர் நேற்று காலை 8 மணிக்கு செங்கோடம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்து அவரது வீட்டுக்கு உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் வந்து உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
ஜி.கே.வாசன் அஞ்சலி
நேற்று மாலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேரில் வந்து துரைசாமி கவுண்டர் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவர் கூறும்போது, ‘கொங்கு மண்டலத்தின் அனைத்து வகையான வளர்ச்சியிலும் துரைசாமி கவுண்டருக்கு பங்கு உண்டு. பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து மகளிர் கல்லூரியை தொடங்கி நடத்திய சாதனையாளர். தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் காமராஜர், ஜி.கே.மூப்பனார் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி, இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளின் முக்கிய முடிவுகளில் பங்கெடுத்தவர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரும் தூணாக விளங்கியவர். அவரது மறைவு அனைவருக்கும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.
எம்.எல்.ஏ.
மறைந்த எஸ்.துரைசாமி கவுண்டர் உடலுக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., ஈரோடு மாநகராட்சி துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடியல் சேகர், ஆர்.எம்.பழனிச்சாமி, கோவை தங்கம், பொன்னுதுரை, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஈ.பி.ரவி, ராஜேஸ், ஏ.மாரியப்பன், தமிழ்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் என்.ஆர்.திருவேங்கடம், எஸ்.என்.பாலசுப்பிரமணியம், வி.பி.சுப்பிரமணியம், தே.மு.தி.க. அவைத்தலைவர் பொன்.சேர்மன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொருளாளர் கே.கே.சி.பாலு, தொழில் அதிபர் சக்தி மசாலா பி.சி.துரைசாமி, டாக்டர் எல்.எம்.ராமகிருஷ்ணன் உள்பட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
மறைந்த துரைசாமி கவுண்டருக்கு, எஸ்.டி.சந்திரசேகர்(வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர்), டி.முத்துசாமி என்ற மகன்களும், இந்திராணி, கவுசல்யா என்ற மகள்களும், சி.பாலசுப்பிரமணியம், எம்.யுவராஜா(தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி மாநில தலைவர்), கே.எம்.செந்தில்குமார், ஏ.எஸ்.திரவேங்கிட ராமேஷ்குமார் என்ற பேரன்களும் உள்ளனர்
