கச்சத்தீவை மீட்கும் பிரச்னையில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 7 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற மண்டலக் கூட்டம் கும்பகோணத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர். மூப்பனார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்திற்கு பின்னர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டி:
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்துடன் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கூட்டத்தில் வேட்பாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், இளைஞர்கள் என அனைவரிடமும் ஆலோசனை செய்துள்ளோம். உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும்.
சட்டப்பேரவைத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை, பணநாயக அடிப்படையில் தான் நடந்துள்ளது.
இந்த வெற்றி இயற்கையானது அல்ல. ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளது உள்கட்சிப் பிரச்னை. அதுகுறித்து நாங்கள் பேச விரும்பவில்லை.
கரும்புக்கான நிலுவைத் தொகையை கரும்பு ஆலைகள் தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க வேண்டும்.
வறட்சி, மழை, வெயில் போன்றவைகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் தனியார் வங்கிகள் ஜப்தி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. மத்திய அரசு விவசாயிகள், மாணவர்கள் வாங்கிய கடன்களை ரத்து செய்ய வேண்டும். கச்சத்தீவுப் பிரச்னை குறித்து மறுபரிசீலனை தேவை என்பதில் மாற்று கருத்து கிடையாது.
இப்பிரச்னை தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.
முன்னதாக நடைபெற்ற மண்டல கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் கோவைதங்கம், பொதுக்குழு உறுப்பினர் சக்திவடிவேல், மாவட்ட தலைவர்கள் ராம்குமார், ரங்கராஜன், தினகரன், சங்கர், ரத்தினகுமார், நாராயணசாமி, கஜேந்திரகுமார் உள்ளிட்ட 7 மாவட்ட நிர்வாகிகள், தஞ்சை வடக்கு மாவட்ட தமாகா தலைவர் ராம்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
