தமிழகத்தில் நடைபெற்று வரும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு தமிழகஅரசு அடக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் மறைந்த முன்னாள் எம்பியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான எல்.இளையபெருமாள் 93-வது பிறந்த நாள் விழா ஆதிராவிடர் மகாஜன சங்கம் மற்றும் இளைபெருமாள் தையமுத்தம்மாள் அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ், மாநில பொதுக்குழு உறுப்பினரும், ஆதிதிராவிடர் மகாஜன சங்க மாநில தலைவருமான டாக்டர் வெற்றி வீரமணி தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் பொறியாளர் ஜோதிமணி, டாக்டர் நந்தகுமார், மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிட மகாஜன சங்க மாவட்டச்ா செயலாளர் தம்பியாபிள்ளை வரவேற்றார்.இந்நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பங்கேற்று காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் அருகே உள்ள எல்.இளையபெருமாள் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: இளையபெருமாள் தலித் மக்களுக்காக பாடுப்பட்டவர். இவர் தலித் மக்களுக்காக உருவாக்கிய இளையபெருமாள் கமிட்டி கூறிய ஆலோசனைகளை செயல்படுத்த வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது பற்றி தேர்தல் நேரத்தில் தெளிவாக தெரிவிப்போம்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். கடந்த காலங்களில் இளையபெருமாள் இறந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டேன். அவரது திருஉருவ சிலை 2012யில் திறக்கும்போதும் கலந்து கொண்டேன்.
தற்போது அவரது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. முல்லை பெரியார் அணை சம்மந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் கேரளா ஆளுநர் சட்ட சபையில் அந்த அணையை ப்பற்றி பேசுவது ஏற்புடையதல்ல அது தவறான முடிவு என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
