மேயர் தேர்தலில் மக்களே மேயரை தேர்ந்தெடுக்கும் முறையை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.

தமிழக உள்ளாட்சி தேர்தலில் தமாகா  பலத்திற்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்போம் என்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேசினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில் நேற்று மாலை ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. சிறுபான்மை பிரிவு தலைவர் அப்பாஸ் தலைமை தாங்கினார். இதில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசியதாவது: ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி ஆகியோர் சிறுபான்மை சமுதாயத்தினரை ஆதரித்து, அரவணைத்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். அவர்கள் கற்று கொடுத்த மதசார்பின்மை கொள்கையைதான் தமாகா பின்பற்றுகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தமாகாவால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் நாம் சோர்வடையவில்லை. இந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மூலம் எழுச்சியும், புத்துணர்வும் கிடைத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தனித்து நிற்கும் நிலையை தொண்டர்கள் ஏற்படுத்த வேண்டும். இதற்காக கிராமங்கள், நகரங்கள் தோறும் சென்று கட்சியை பலப்படுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் பலத்திற்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்போம். மேயர் தேர்தலில் மக்களே மேயரை தேர்ந்தெடுக்கும் முறையை தமிழக அரசு பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தமாகா மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், கத்திப்பாரா ஜனார்த்தனன், எம்.எஸ்.ஹமீது, ஹசன் அலி, சக்தி வடிவேல், விடியல் சேகர், முனவர் பாட்ஷா, மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் அண்ணாநகர் ராம்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் வீனா விளாசினி, மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *