மிழக மக்கள் அதிமுக, திமுக என வாக்களிப்பதை விட்டு உண்மையான ஆட்சி மாற்றத்துக்கு தயாராக வேண்டும் என தமாகா ஜி.கே.வாசன் கூறினார்.
மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் முஜிபுர் ரஹ்மானை ஆதரித்து செவ்வாய்க்கிழமை மாலை பீபீகுளம் பகுதியில் திறந்தவேனில் பிரசாரத்தில் ஈடுபட்ட தமாகா தலைவர் ஜி.கே. வாசன் பேசியது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது, அதிமுகவுக்குப் பதில் திமுகவோ, திமுகவுக்குப் பதில் அதிமுகவோ வருவதல்ல. நேர்மையான, வெளிப்படையான, தூய்மையான நிர்வாகத்தைத் தருபவர்கள் யாரோ, அவர்களை ஆட்சியில் அமரச் செய்வதே உண்மையான ஆட்சி மாற்றம். அத்தகைய ஆட்சியை தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி மற்றும் தமாகா தலைவர்களால் மட்டுமே தரமுடியும்.
காமராஜர் ஆட்சியில் முன்னணியில் இருந்த அனைத்து துறைகளும் திமுக, அதிமுக ஆட்சியால் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆகவே, மக்கள் நலக்கூட்டணியே தூய்மையான கூட்டாட்சியைத் தரும். இந்த கூட்டணித் தலைவர்கள் பொய் வாக்குறுதியை அளிக்காமல் எதைச் செயல்படுத்த முடியுமோ, அதை மட்டுமே கூறிவருகின்றனர். ஆனால், திமுக, அதிமுக ஆள்பலம், பணபலம், அதிகார பலத்தை நம்புகிறது. இந்தத் தேர்தலில் உண்மையான ஆட்சி மாற்றம் ஏற்படாவிட்டால், ஆண்டவனால்கூட தமிழகத்தை காப்பாற்றமுடியாது. ஆகவே மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராக வேண்டும். மக்கள் நலக்கூட்டணி ஆட்சியமைத்தால், மதுரையில் கண்மாய்கள், கால்வாய்கள் தூர்வாரப்படும் என்றார்.
இதில் தமாகா மாநகர் மாவட்டச்செயலர் பி.சேதுராமன், தேமுதிக மத்திய தொகுதி வேட்பாளர் டி.சிவமுத்துகுமார், மார்க்சிஸ்ட் ஜோதிராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
