தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையால் துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும், நம் மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
தற்போது இலங்கையின் வசம் உள்ள தமிழக மீனவர்களின் 68 படகுகளையும் தமிழகத்திடம் ஒப்படைக்க வலியுறுத்தி நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டப் பகுதியைச் சேர்ந்த 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த சில நாட்களாக போராடி வருகிறார்கள். இதனால் மீனவர்களுக்கும், இத்தொழிலை நம்பி இருப்பவர்களுக்கும், அரசுக்கும் பலகோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள், மீன்பிடி படகு உரிமையாளார்கள், மீன் வியாபாரிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இலங்கை சிறையில் உள்ள 7 மீனவர்களையும், தமிழக மீனவர்களின் 68 படகுகளையும் காலம் தாழ்த்தாமல் தமிழகத்திடம் உடனடியாக ஒப்படைக்க மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.
ஏற்கனவே இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 18 படகுகள் சேதமடைந்த நிலையில் இருப்பதால் அவைகளைப் பழுதுபார்ப்பதற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். மேலும் இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளுக்கிடையே மீண்டும் அடுத்தக் கட்டப் பேச்சு வார்த்தை விரைந்து நடைபெறவும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
G.K. வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
