காவிரியின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு: டிச.8ல் தஞ்சையில் தமாகா போராட்டம்

சென்னை: காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் டிசம்பர் 8ஆம் தேதி தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் பிறந்த பின்னர் வாசன் கட்சி நடத்தும் முதல் போராட்டம் இதுவாகும்.

இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணைகள் கட்டும் திட்டத்தை தடுக்க வேண்டும், மீத்தேன் எரிவாயு திட்டத்தால் காவிரி டெல்டா மாவட்ட விளை நிலங்கள் பாதிப்புக்குள்ளாவதை நிறுத்த வேண்டும். விவசாயிகளுக்கு அரசு மானிய விலையில் அளிக்கப்படும் உரம் மற்றும் இடு பொருட்கள் உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும் போன்ற காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வருகிற டிசம்பர் 8-ஆம்தேதி (திங்கள்கிழமை) காலை 11 மணியளவில் தஞ்சாவூர் ரயில் நிலையம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

தனது தலைமையில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், இயக்கத்தின் மூத்த முன்னணி தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கு பெறுகிறார்கள்.

தமிழக விவசாயிகளின் நலனை காப்பதற்காக நடைபெறும் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காவிரி டெல்டா விவசாயிகளும், பொது மக்களும் பெருந்திரளாக கலந்துக் கொண்டு தங்களது மேலான ஆதரவை அளிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்வதாகவும் வாசன் தெரிவித்தார்.

Courtesy: OneIndia Tamil