தமாகா உறுப்பினர் சேர்க்கை துவக்கம்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது.  கட்சி தலைவர் ஜி.கே வாசன் தலைமை வகித்து ஸ்மார்ட் கார்டு வடிவிலான உறுப்பினர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தினர். முதல் உறுப்பினர் அட்டையை முன்னாள் எம்பி ஞானதேசிகன் பெற்று கொண்டார். விழாவில் மூத்த தலைவர் எஸ்.ஆர் பாலசுப்ரமணியன், பாரமலை, முன்னாள் எம்பிக்கள் விஸ்வநாதன், ராமசுப்பு, முன்னாள் எம்எல்ஏக்கள் பீட்டர் அல்போன்ஸ், கோவை தங்கம், விடியல் சேகர், ராஜசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஜி.கே வாசன் பேசியதாவது.

உறுப்பினர் சேர்க்கை ஜனவரி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்கட்டமாக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 20 ஆயிரம் உறுப்பினர்கள் என 234 தொகுதிகளுக்கும் 50 லட்சம் உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் வழங்கப்படும். பதவிகள் பெறுவதில் போட்டியிட கூடாது. உறுப்பினர் சேர்க்கையில் தான் அதை காண்பிக்க வேண்டும்.

ஒரு மாத காலமாக தமிழகத்தில் எல்லோரும் நம்மை உற்று பார்த்து கொண்டிருக்கின்றனர். இது நல்ல துவக்கம் என்று பாராட்டுகின்றனர். அதே நேரம் எங்கோ ஒரு ஓரத்தில் இருந்து எதிர்ப்பு குரல் கேட்கிறது. நாம் பதிலுக்கு பதில் ஏட்டிக்கு போட்டி என்ற அரசியலை தவிர்க்க வேண்டும். 48 ஆண்டு கால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா என்பது உறுப்பினர் சேர்க்கையின் முடிவில் தான் தெரியும்.இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் கூட்டத்தில் எஸ்.டி நெடுஞ்செழியன், கத்திப்பாரா ஜனார்த்தனன், யுவராஜா, சைதை ரவி, அனுராதாஅபி, தாஸ் பாண்டியன், வில்லிவாக்கம் சுரேஷ், என்.டி.எஸ் சார்லஸ், ராஜ மகாலிங்கம், வேணுகோபால், லோகு சுப்ரமணியம், பொன்.ராஜ், லயன்மணி, லயோலா நாசர், கசாலி, பதம்சந்த், சீனிவாசன், அயன்புரம் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்