முறையான ஒதுக்கீடு வழங்கும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட வேண்டும்

1934 ஆம் ஆண்டு நம் நாட்டில் சாதி வாரியாக சமூகத்திலும், பொருளாதாரத்திலும் கணக்கெடுக்கப்பட்டது. அதன் பின் இந்த கணக்கெடுப்பு 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2013 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. அந்த அறிக்கையினை மத்திய நிதி அமைச்சர் தற்போது வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கிராமம் முதல் நகரம் வரை சுமார் 24.39 கோடி குடும்பங்கள் வாழ்கின்றன.
இதில் கிராமங்களில் வாழும் சுமார் 18 கோடி குடும்பங்களில் 10.60 கோடி குடும்பத்தினருக்கு வசதியும் இல்லை; படிப்பறிவும் இல்லை; வாழ்வதற்கு கஷ்டமான நிலையில் இருக்கின்றனர். இந்த புள்ளி விவரங்கள் நம் நாட்டில் வாழும் மக்களுக்கு அவர்களது சாதிப்பிரிவின் அடிப்படையில் உரிய உரிமைகள், ஒதுக்கீடுகள் முழுமையாக சென்றடைய வில்லை என்பதைக் காட்டுகிறது.
மத்திய பா.ஜ.க அரசு சாதி வாரி கணக்கெடுப்பின் விவரங்களை இன்னும் வெளியிடாமல் கால தாமதப்படுத்துகிறது. கிராமப்புற பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் பிரிவினர் உட்பட அனைத்து பிரிவினரையும் சாதி வாரி கணக்கெடுப்பில் சரியாக சேர்க்க வேண்டும்.
மத்திய அரசு நகரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கிராமங்களுக்கும் கொடுக்க வேண்டும். கிராம மக்கள் நலனைப் புறக்கணிக்கும் போக்கை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.
நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது கிராமப்புற மற்றும் நகர்புற மக்களின் ஒட்டு மொத்த முன்னேற்றத்தை கொண்டதாக இருக்க வேண்டும்.