மதுவிலக்கை வலியுறுத்தி 5–ந்தேதி த.மா.கா போராட்டம்

த.மா.கா. கலை இலக்கிய அணி மாநில அமைப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் மது தீமைகள் பற்றி விழிப்புணர்வு பாடல்கள் அடங்கிய சி.டி. தயாரித்துள்ளார்.
இதன் வெளியீட்டு விழா இன்று ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடந்தது.
தலைவர் ஜி.கே.வாசன் இந்த சி.டி.யை வெளியிட்டார்.
பின்னர் தலைவர் கூறியதாவது:–
மதுவிலக்கை வலியுறுத்தி 5–ந்தேதி நாம் நடத்தும் போராட்டம் அரசுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
குடியினால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன.
ஏராளமான இளைஞர்களும், மாணவர்களும் குடிக்கு அடிமையாகிறார்கள்.
எனவே, மக்களை காப்பாற்ற மது ஒழிப்பு அவசியம்.
இந்த பிரசாரப் பாடல் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒலிக்கும்.
இடைத்தேர்தல்கள் ஆளும் கட்சியின் செயல்பாடுகளை கணிக்கும் நோக்கிலேயே அமையும். ஆனால், அந்த நிலைமாறி, ஆளும் கட்சி மட்டுமே வெற்றி பெறும் சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளது.
2001 முதல் இதுவரை நடந்த 22 இடைத்தேர்தல்களிலும் ஆளும் கட்சியே வெற்றி பெற்றுள்ளது.
எனவே ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலிலும் த.மா.கா. போட்டியிடவில்லை.
இப்போது அது மாறுவதற்கான சூழ்நிலை இல்லை.
எனவே, ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்.
த.மா.கா. தொண்டர்கள் மனசாட்சியுடன் வாக்களிக்க வேண்டும்.
கடந்த ஆண்டு 25 லட்சம் லிட்டர் பாலை ஆவின் மற்றும் கூட்டுறவு பால் ஒன்றியங்கள் கொள்முதல் செய்தன.
இப்போது 30.5 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆனால், ஆவின் நிர்வாகம் இதை கொள்முதல் செய்யவில்லை.இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகி இருக்கிறார்கள்.
எனவே, பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்.
ஜெயலலிதா வழக்கின் மேல்முறையீட்டை கர்நாடக அரசு சட்டப்படி செய்திருக்கிறது.
தமிழகம் மட்டுமின்றி பெரும்பாலான மாநிலங்களில் கூட்டணி ஆட்சி வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மக்களின் விருப்பத்தை வெளியிடுவதில் தவறில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஞான தேசிகன், பீட்டர் அல்போன்ஸ், கோவை தங்கம், விடியல் சேகர், சக்தி வடிவேல், அண்ணாநகர் ராம்குமார், கத்திப்பாரா ஜனார்த்தனம், டி.என்.அசோகன், டி.எம்.பிரபாகர், ஜி.ஆர்.வெங்கடேஷ், ஹேமநாதன், சீனிவாசன், கராத்தே வெங்கடேஷ், சைதை நாகராஜன், இல. பாஸ்கரன், முகமது பயஸ், சைதை மனோகர், கோவில் பாஸ்கர் கோவூர் வெங்கடேஷ், ராஜ மகாலிங்கம், கிண்டி மம்மு, மால்மருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.