பூரண மது விலக்கை வலியுறுத்திய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்திற்கு பெரும்பாலான இடங்களில் பெதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்பு

பூரணமது விலக்கை அமல்படுத்த கோரி த.மா.கா. சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மதுவை ஒழிப்போம், மக்களை காப்போம், தாலியை பறிக்கும் மதுவை ஒழிப்போம்.
டாஸ்மாக் வேண்டாம் பள்ளிக்கூடம் வேண்டும் என்பது போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
முன்னதாக விருதுநகர் கல்லூரி மாணவ–மாணவிகள் பங்கேற்ற மதுவின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் த.மா.கா நிர்வாகிகள் தொண்டர்கள், இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஜி.கே.வாசன் கூறியதாவது:–
குடியை கெடுக்கும் மதுவை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதுதான் த.மா.கா.வின் விருப்பம்.
இங்கு திரண்டிருக்கும் கூட்டத்தை பார்த்தால் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னையும் த.மா.கா.வின் கோட்டையாக மாறும் என்பது உறுதியாக உள்ளது.
உடலையும், உள்ளத்தையும் ஒழுக்கத்தையும் கெடுத்து வாழ்வை தொலைத்து மக்களை அழிவுப்பாதைக்கு இழுத்துச் செல்லும் மது வேண்டாம்.
காந்தியும், காமராஜரும் மது விலக்கைத் தான் கடைபிடித்தார்கள். காமராஜர் ஆட்சிகாலம் வரை மதுவிலக்கு அமலில் இருந்தது.
இருதிராவிட கட்சிகளும் ஆட்சிக்கு வந்த பிறகு மதுவிலக்கை, கைவிட்டு விட்டன. இதனால் ஏற்படும் அவலம் நீடித்து வருகிறது.
மாநிலத்தின் வளர்ச்சி பாதித்து வருகிறது. மதுக்கடைகள் மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்கிறார்கள்.
இதை வேறு வழிகளில் ஈட்டிக்கொள்ள முடியும். ஏழைகளின் வயிற்றில் அடித்து, ஏழை பெண்களின் வாழ்வை கெடுத்து மக்களை மரணப் படுக்கையில் கிடத்தி வைக்கும் இந்த வருமானம் வேண்டாம்.
மரண வாசலில் இருந்து மக்களை காப்பாற்றுங்கள்.
வருமானத்தை பார்க் காதீர்கள் ஏழைகளின் துயரத்தை பாருங்கள். இளைஞர் சமுதாயம் மதுவால் சீரழிந்து கொண்டு இருக்கிறது. மதுக்கடைகளை மூடவும் மதுவில் இருந்து மக்களை விடுவிக்கவும் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்களை செய்வோம்.
பின்னர் கையெழுத்து இயக்க பேனரில் கையெழுத்து போட்டு பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
அவரை திராவிட முன்னேற்ற மக்கள் கழக தலைவர் ஞானசேகரன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.