புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் இழப்பைக் கணிப்பதற்கு கிராமத்தை அளவு கோளாகக் கொள்ள வேண்டும் – ஜி.கே.வாசன்

மத்திய அரசு அறிவித்திருக்கும் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்படி, விவசாயிகள் தங்கள் பயிரை இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். அதற்கு நிர்ணயிக்கப்படும் பிரிமியம் தொகையில் 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை மட்டுமே விவசாயிகள் செலுத்த வேண்டும். மீதித் தொகையை மத்திய, மாநில அரசுகள் சரிசமமாகப் பகிர்ந்து காப்பீட்டு நிறுவனத்துக்கு கட்ட வேண்டும். ஆனால் இழப்பீட்டை அளவிடுவதற்கு மாவட்டம் அல்லது ஒன்றியம் அல்லது பஞ்சாயத்துப் பகுதி அளவுகோலாக எடுக்கப்படுமா அல்லது ஒவ்வொரு கிராமமும் அளவுகோல் ஆகுமா என்பது தெளிவுப்படுத்தவில்லை.

மாவட்டம் அளவுகோல் என்றால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டால் தான் இழப்பீடு கிடைக்க வாய்ப்பு ஏற்படும். வித்தியாசமான நிலப்பரப்பும், நீர் வசதியும், மண் வளமும், பயிர் செய்யும் முறையும் மாறுபடுகின்ற நேரத்தில் தமிழகத்தில் மாவட்டம் அல்லது ஒன்றியம் அல்லது பஞ்சாயத்து அளவுகோலாக எடுக்கப்பட்டால் அது விவசாயிகளுக்குப் பாதகமாக முடியும்.

ஆகவே ஒவ்வொரு தனி நபர் விவசாயின் பாதிக்கப்பட்ட விளைநிலத்தை அல்லது ஒரு சிறு கிராமத்தை ஒரு பகுதி ஆகக் கொள்ளப்பட வேண்டும். அக்கிராம விளைநிலத்தில் விளைச்சல் பாதிக்கப்பட்டால் இழப்பீடு தரப்பட வேண்டும். அடுத்த கிராமத்தில் விளைச்சல் நன்றாக இருந்தது என்பதற்காக பாதிக்கப்பட்ட கிராம விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தவிர்க்கப்படக் கூடாது.

அவ்வாறு இழப்பீடு வழங்கும் போது பயிர்க்கான இலாபம், விற்பனை விலையை கணக்கில் கொண்டு வழங்கினால் தான் விவசாயிகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவார்கள். மேலும் இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் இப்பொழுது 2 ஆண்டுகள் கூட தாமதம் ஆகிறது. எனவே இப்புதிய திட்டத்தின் கீழ், அறுவடை முடிந்த மூன்று மாதத்திற்குள் இழப்பீடு வழங்குவதற்கு வழிவகைச் செய்திட வேண்டும். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் எந்த ஒரு விவசாயும் பாதிக்கப்படக்கூடாது. அதே நேரத்தில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு முழுமையான இழப்பீடு கிடைக்கப்பெற மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும்.

G.K. வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *