பரம்பிக்குளம் அணை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணை தமிழகப் பொதுப் பணித்துறையால் கட்டப்பட்டது. இந்த அணையை தமிழக அரசு தொடர்ந்து பராமரித்து வருகிறது.
இந்நிலையில் கேரள அரசு பரம்பிக்குளம் அணையை பராமரிக்கச் சென்ற தமிழக அரசு அதிகாரிகளை அனுமதிக்க மறுப்பதும், அவர்களை பணியாற்றவிடாமல் தடுப்பதும் நடைபெற்று வருகிறது. இதனை மத்திய பா.ஜ.க அரசு வேடிக்கைப் பார்க்கக்கூடாது. இது இரு மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவுக்கு வழிவகுக்காது.
மேலும் பரம்பிக்குளம் அணை கேரளாவுக்கு தான் சொந்தம் என்று மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை வைத்தது. தமிழக அரசின் தொடர் பராமரிப்பில் உள்ள பரம்பிக்குளம், துணா கடவு மற்றும் பெருவரிப்பள்ளம் ஆகிய மூன்று அணைகளும் கேரள அரசின் பொறுப்பில் உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது ஒருதலைப்பட்சமான முடிவாகும்.
தமிழகத்தின் பராமரிப்பில் இருக்கும் இந்த அணையின் விவகாரத்தில் மத்திய அரசு தமிழக அரசின் கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக ஓர் அறிவிப்பை வெளியிட்டிருப்பது இரு மாநிலங்களுக்கும் இடையே சிக்கலுக்கும், சர்ச்சைக்கும் வழி வகுக்கும்.
எனவே இரு மாநிலங்களுக்கிடையே நல்லுறவு தொடர, மத்திய அரசு பரம்பிக்குளம் அணையின் பராமரிப்பு பணி தமிழகத்துக்கு தான் உரியது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் தமிழகத்தின் பராமரிப்பில் உள்ள அணைகளை தமிழகமே தொடர்ந்து மேற்கொள்ள தமிழக அரசு உடனடியாக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
G.K. வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்