தமிழக காய்கறிகளுக்கு கேரள அரசு தடை விதித்திருப்பதை நீக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

vb

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக காய்கறிகளில் நச்சு இருப்பதாக கூறி கேரள அரசு தடை விதித்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

மேலும் தமிழகத்தில் இருந்து வரும் பால் மற்றும் இறைச்சியை தடை செய்ய ஆலோசனை நடைபெறுவதாகவும் கேரள உணவுத்துறை அமைச்சர் கூறியிருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் ஏற்கனவே விவசாயத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரள அரசின் இந்த அறிவிப்பு கேரளாவிற்கு காய்கறிகளை அனுப்பும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விளையும் காய்கறிகளின் மாதிரிகள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டு பல்கலை பூச்சியியல் துறையின் பூச்சிக் கொல்லி நச்சு இயல் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது.

இந்த ஆய்வகம் மத்திய அரசின் சோதனை மற்றும் அளவீட்டு ஆய்வுக் கூடங்களின் தேசிய அங்கீகாரம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வின் படி 96 சதவிகிதம் காய்கறி மற்றும் பழங்களில் நச்சுத்தன்மை இல்லை என்பது தெளிவானது. இதனை தமிழக அரசு கேரள அரசுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

கேரள அரசிற்கு இது குறித்து ஏதாவது சந்தேகம் இருப்பின் அதனைப் போக்குவதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தமிழக சிறு வியாபாரிகள், விவசாயிகள், காய்கறி உற்பத்தியாளர்கள் நலன் காத்திட வேண்டும் என்று கேட்க்கொள்கிறேன்.