தமிழக அரசு ஈரோடு பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் கழிவுகளை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்

தமிழகத்தில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும் என்பதை தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏற்கனவே ஈரோடு மாவட்டப் பகுதியில் உள்ள சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் – அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் கலந்து குறிப்பாக காவிரி நதிநீரில் கலந்து நீரானது மாசடைகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதே இதற்குண்டான நடவடிக்கையை எடுத்து நீர் மாசடவதை தடுத்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா நோய் பரவல் காரணத்தால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, கழிவு நீர் வெளியேறும் பிரச்சனை இல்லை. இருப்பினும் இப்போது ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விதிமுறைகளோடு தொழிற்சாலைகள் இயக்கப்பட அனுமதிக்கப்பட்டது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள், சாய ஆலைகள், அச்சு தொழிற்சாலைகள் என சில தொழிற்சாலைகள் இயக்கப்பட ஆரம்பித்த பிறகு அப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் மாசடைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்கால், காவிரி ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலந்து நீர் மாசுபடுகிறது. இதற்கு காரணம் ஈரோடு மாவட்டப் பகுதிகளில் இயக்கப்படும் சில தொழிற்சாலைகளின் கழிவுகள் சுத்திகரிப்பு செய்யப்படாமல் வெளியேற்றப்படுவது தான். அது மட்டுமல்ல கழிவு நீர் வெள்ளை நுரையாக மாசடைந்து பல பகுதிகளில் தேங்கி கிடப்பது சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் கழிவுப்பொருட்கள் நீர் நிலைகளில் கலந்து குடிநீர் மாசடைகிறது. மொத்தத்தில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு விவசாயமும், மனிதர்களும், பல்வேறு உயிரினங்களும் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படுகிறது. பொதுவாக தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகள் உள்ளிட்ட வேறு எந்த கழிவையும் சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டியது தொழிற்சாலை நிர்வாகத்தின் பொறுப்பு. எனவே தமிழக அரசு ஈரோடு பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் கழிவுகளை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.#ஜி_கே_வாசன்தலைவர்#தமிழ்_மாநில_காங்கிரஸ்#gkvasan#tamilmaanilacongress#tm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *